Tuesday 18 October 2016

'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்

ஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது. 



கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓர் இலவச செயலி 'கூகுள் போட்டோஸ்'. இது ஏதோ படங்களைத் தன்னிடத்தே தேக்கி வைத்து, அவற்றை நிர்வாகம் செய்திட வழி வகுக்கும் புரோகிராமாகத்தான் நாம் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர், இந்த செயலி குறித்தும் அதனைப் பயன்படுத்துவது குறித்தும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த செயலியின் பல்வேறு பயன்பாடுகளை இங்கு காணலாம். 


கூகுள் போட்டோஸ் (Google Photos)


க்ளவ்ட் சேமிப்பு தளம், படங்களைத் தேக்கி வைக்கும் இடம் மற்றும் படங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் ஒரு சாதனம் எனப் பன்முக பயன்களைத் தரும் ஒரு செயலியாகும். இதனால், இதனை Flickr, iCloud, Dropbox, and OneDrive ஆகிய செயலிகளுக்குப் போட்டியாகக் கூடக் கருதலாம்.  நம்முடைய ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன்களிலிருந்து நம் போட்டோக்களை பேக் அப் செய்து வைக்கும் தளமாக நாம் இதனை அறிந்திருக்கிறோம். இணையத்தில் இதனை அணுகி, நம் போட்டோக்களைக் காணும் வசதியை இது தருகிறது. இதனை “high quality” (16 எம்.பி. அளவிலான போட்டோக்கள் மற்றும் ஹை டெபனிஷன் வீடியோக்கள்) என்னும் அமைப்பில் அமைத்தால், அளவற்ற எண்ணிக்கையில் போட்டோ மற்றும் விடியோ பைல்களை இதில் தேக்கி வைக்கலாம். இதற்கும் மேலான திறன் கொண்ட போட்டோ மற்றும் விடியோ பைல்கள் இருந்தால், அதற்கான இடத்தை நமக்கு கூகுள் தந்திருக்கும், கூகுள் ட்ரைவ் இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். இந்த வசதிகளைத் தவிர, வேறு சில பயன்பாடுகளையும் நாம் இதில் மேற்கொள்ளலாம். அவற்றை இங்கு காணலாம்.



ஆட்கள், இடங்கள் மற்றும் பிற தேடல்:

கூகுள் போட்டோஸ் தளம், நாம் எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பும் படங்களை, அவை எடுக்கப்பட்ட இடம், நாள் என்ற வகையில் தானாகவே வகைப்படுத்தி வைக்கிறது. கூகுள் ஏற்கனவே தான் கொண்டுள்ள, படங்களைப் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும், தான் ஏற்கனவே கொண்டுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையிலான படங்களின் அடிப்படையிலும், உங்கள் படங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, அவை சுட்டும் அல்லது காட்டும் பொருளை வகைப்படுத்திக் கொள்கிறது. இதனால், நாம் நம் போட்டோக்களை அவற்றின் வகைப்படி தேடி அறிய முடிகிறது. சென்ற மாதம் நாம் கலந்து கொண்ட திருமணம், விடுமுறையில் எடுத்த போட்டோ, நம் செல்லப் பிராணிகளின் படங்கள், உணவுப் பொருட்கள் எனப் பல வகைகளில் நம் படங்களைத் தேடிப் பெற முடியும். உங்கள் கூகுள் போட்டோஸ் தளத்தின் கீழாக, வலது பக்கம், உள்ள தேடலுக்கான ஐகானைத் தட்டி, கிடைக்கும் கட்டத்தில், உங்கள் தேடல் சொல்லை, எ.கா. உணவு, கார் என எது குறித்தும் டைப் செய்து, “Enter” அல்லது “Search” டேப் செய்து தேடினால், படங்கள் காட்டப்படும். தானாகக் குழுவாக அமைக்கப்பட்ட படங்கள், தேடல் கட்டத்தின் முதன்மைப் பிரிவிலேயே காட்டப்படுகின்றன. மேலாக, நாம் எடுத்த போட்டோக்களின் சில முகங்கள் காட்டப்படுவது இதன் சிறப்பு.



ஒரே மாதிரியான முகங்கள் தொகுப்பு: 


உங்களுடைய போட்டோக்களில் உள்ள முகங்களிலிருந்து, கூகுள் போட்டோஸ் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் குழுக்களை அமைக்கிறது. இவற்றின் அடிப்படையில், நாம் “Mom” என்றோ, அல்லது பெயர்களைக் கொடுத்தோ, போட்டோக்களைத் தேடலாம். இது போன்ற குழுக்களின் பெயர்கள் மற்றும் செல்லப் பெயர்கள் அனைத்தும், உங்கள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்த முடியாது. குழுக்களுக்குப் பெயர் கொடுக்க, அல்லது முகங்களின் அடிப்படையிலான பொதுப் பெயர்கள் கொடுக்க, முகக் குழு ஒன்றின் மேலாக உள்ள “Who is this?” என்பதில் டேப் செய்திடவும். இங்கு உள்ள கட்டத்தில், நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரினைத் தரவும். உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால், “Options” என்ற மெனுவில் டேப் செய்து, “Edit or Remove name label” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நபரின் படம் இரு குழுக்களில் இருந்தால், இரண்டையும் ஒன்றிணைக்கலாம். இவ்வாறு ஒரே முகத்தினை இரு குழுக்களில் கூகுள் போட்டோஸ் அமைப்பதனையும் தடை செய்திடலாம். இதற்கு “Settings” சென்று, “Group similar faces,” என்று இருப்பதன் அருகே உள்ள ஸ்விட்ச்சை இயக்காமல் வைக்கலாம்.



பேக் அப் அமைப்பை மாற்றலாம்: 

உங்களுடைய போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் குறிப்பிட்ட கூகுள் அக்கவுண்ட்டில் பேக் அப் செய்திடப்படும். இருப்பினும், நீங்கள் எந்த அக்கவுண்ட்டில் இவற்றை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை மாற்றி அமைக்கலாம். இதற்கு கூகுள் போட்டோ தளத்தில், “Settings > Back up and sync” எனச் சென்று மாற்ற வேண்டும். அக்கவுண்ட் பெயர் இடத்தில் டேப் செய்து மாற்றலாம். Upload Size என்ற இடத்தில் டேப் செய்து “High Quality” மற்றும் “Original” என்ற தன்மையினை நிர்ணயம் செய்திடலாம். “High Quality” என்பதைத் தேர்ந்தெடுத்தால், வரையறையின்றி போட்டோக்களையும், விடியோ பைல்களையும் சேவ் செய்திடலாம். “Original” நிலை தேர்ந்தெடுத்தால், கட்டணம் எதுவும் செலுத்தாமல், 15 ஜி.பி. அளவிற்கு இவற்றைச் சேமிக்கலாம்.



வை பி அல்லது நெட்வொர்க்:

 இணைய இணைப்பு என்பது இருவகையில் மேற்கொள்ளலாம். மொபைல் போன் சேவையோடு இணைந்த டேட்டா வகை இணைப்பு மற்றும் வை பி இணைய இணைப்பு. இதில் எந்த வகையில் இருக்கும்போது, அல்லது இரண்டு வகையிலும் இருக்கையில் போட்டோக்களை தரவேற்றம் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல “Back up all” என்பதைத் தேர்ந்தெடுத்தால், போட்டோ மற்றும் விடியோ என இரண்டும் பேக் அப் ஆகும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி, இவற்றை அப்லோட் செய்தால், நெட்வொர்க் டேட்டா என அதிக செலவாகும். எனவே, வை பி மட்டும் எனத் தேர்ந்தெடுப்பதே நல்லது. இதில் While charging only என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இதனைத் தேர்ந்தெடுத்தால், நம் மொபைல் போன், பேட்டரியில் இயங்காமல், மின்சக்திக்கான இணைப்பில் இருக்கையில் மட்டும் நம் போட்டோக்கள் அப்லோட் செய்திடும். எனவே, விடுமுறையில் நாம் வெளியே செல்கையில், நம் பேட்டரியின் மின் சக்தி தீர்ந்துவிடுமோ என்ற பயம் தேவை இல்லை.


போட்டோக்களை அழித்துவிடலாமே:


உங்கள் மொபைலில் எடுத்த போட்டோக்களை நீங்கள் கூகுள் போட்டோஸ் அல்லது வேறு ஒரு க்ளவ்ட் ஸ்டோரேஜில் தேக்கி வைப்பதாக இருந்தால், கேமராவில் உள்ள படங்களை அழித்துவிடலாமே. கேமராவின் நினைவகம், புதியதாக எடுக்கப்படும் போட்டோக்களுக்குப் பயன்படுமே.



மற்ற செயலிகளிலில் உள்ள போட்டோக்கள்:


 கூகுள் போட்டோஸ் செயலி, அது எந்த மொபைல் போனில் இயக்கப்படுகிறதோ, அந்த மொபைல் போனில் எடுக்கப்படும் படங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும். வாட்ஸ் அப் போன்ற பிற செயலிகளிலில் கிடைக்கப் பெறும் போட்டோக்களையும் இதற்கு அனுப்ப வேண்டுமாயின், அவை எங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன என்பதை, கூகுள் போட்டோஸ் செயலிக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்கு, மெனுவில் உள்ள “Device Folders” என்பதனைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை எனில், “Settings > Back up and sync,” எனச் சென்று, “Choose folders to back up…” என்பதில் தட்டி, பேக் அப் செய்வதற்கான போல்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



காணும் தோற்றம் மாற்ற: 

படம் ஒன்றை விரல்களால் அழுத்தி இழுத்து, பெரிதாக மாற்றலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கூகுள் போட்டோஸ் செயலியின் மூலம் இன்னும் சில செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அவை, daily view, போட்டோவினை திரை முழுக்கப் பார்க்க “comfortable” view எனச் சில தோற்ற வகைகளைக் காணலாம்.


ஒரே அழுத்தத்தில் பல போட்டோக்கள் தேர்ந்தெடுத்தல்:

நூறு போட்டோக்களை உங்கள் போனில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நீங்கள் நூறு முறை தட்ட வேண்டியதிருக்கும். இதை கூகுள் போட்டோஸ் மூலம் தவிர்த்து, ஒரே தட்டலில் மொத்தமாகப் போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்க வேண்டிய போட்டோக்களில், முதல் போட்டோவில், சில விநாடிகள் கூடுதலாக அழுத்தவும். பின்னர், விரலை எடுக்காமல், மேல் கீழாக, பக்கவாட்டில் விரலை நகர்த்தி, போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கவும். இணைய தளத்தில் இதனை மேற்கொள்கையில், ஷிப்ட் கீ அழுத்தியவாறு ஒரே நேரத்தில் பல போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


அழித்ததைத் திரும்பப் பெற:

சற்று வேகமாகச் செயல்படுகையில், நீங்கள் நீக்க விரும்பாத போட்டோ ஒன்றினை அழித்தால், மீண்டும் அதனைப் பெற கூகுள் போட்டோஸ் வழி தருகிறது. நீங்கள் அழித்த போட்டோக்களை, கூகுள் போட்டோஸ் செயலி, தன் ட்ரேஷ் பெட்டியில் 60 நாட்கள் வரை வைத்திருக்கும். அந்த போல்டர் சென்று, மீண்டும் தேவைப்படும் போட்டோவினை மீட்டு எடுக்கலாம். 



தரவேற்றம்:

 கூகுள் போட்டோஸ் தானாகவே, போட்டோக்களை அதன் தளத்திற்கு அப்லோட் செய்திடும். ஆனால், அது டெஸ்க்டாப் அப்லோடர்களையும் கொண்டுள்ளது. போல்டர்களை முழுமையாக இழுத்துச் சென்று, photos.google.com தளத்தில் விட்டுவிட்டால், அதில் உள்ள போட்டோக்கள் தானாக அப்லோட் செய்யப்படும். மேலே சொல்லப்பட்ட வசதிகளுடன், இன்னும் சில வசதிகளும் கூகுள் போட்டோஸ் புரோகிராமில் கிடைக்கிறது. அவை மற்ற கூகுள் செயலிகளுடன் இணைந்து செயல்படுபவை ஆகும். அவற்றின் உதவிப் பக்கங்களில் இந்த வசதிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment